இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.41 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு ஒன்றரை லட்சத்தை தினசரி கொரோனா பாதிப்பு நெருங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,41,986 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 90,928 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை 1,17,100 ஆக பதிவானது. இந்த சூழலில் தினசரி கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 40,895 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை குணமானோர் எண்ணிக்கை 3,44,12,740 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். நேற்று 302 பலியான நிலையில் இன்று கொரோனா பலி எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதன்படி இந்தியாவில் இதுவரை 4,83,178 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கொரோனாவால் 4,72,169 பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவை தடுக்கும் முக்கிய ஆயுதமாக சொல்லப்படும் தடுப்பூசியானது 150.06 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தினசரி கொரோனா பாதிப்பு 9.28% ஆக உள்ளது.