ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி வருகிற ஜனவரி 17 -ம் தேதி மெல்பர்னில் தொடங்கவுள்ளது. இதற்காக டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் ஆஸ்திரேலியா வந்த வண்ணம் உள்ளனர்.
இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்று ஆஸ்திரேலிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, இப்போட்டியில் பங்கேற்பதற்காக, ஜனவரி 5 -ம் தேதி மெல்பர்ன் விமான நிலையம் வந்தடைந்தார், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்.
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா வந்தடைந்த, ஜோக்கோவிசின் விசா ரத்து செய்யபட்டது. இதற்கு ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே காரணம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் கொரோனாவின் பெருந்தொற்றில் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவே இதனைச் செய்துள்ளோம் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. ஜோகோவிச் 9 முறை ஆஸ்திரேலியா ஒபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டதற்கு ஜோக்கோவிச்சின் தந்தை அவமானமாகக் கருதி, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். ஜோக்கோவிச், தனக்கு மருத்துவ விலக்கு கிடைத்தாகக் கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது குறித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
“ஜோகோவிச்சுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நினைத்து வருந்துகிறேன். அவருக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், தடுப்பூசி செலுத்தியிருந்தால், இங்கே மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் விளையாட அனுமதி கிடைக்கும்.
எனக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்ப்பட்டது. ஆனால் நான் தடுப்பூசி செலுத்தியதால் அனுமதி கிடைத்தது. தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியா அரசு கூறும் செய்தி. நடந்த சம்பவதிற்க்கு வருந்துகிறேன்”என்று தெரிவித்தார்.