நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
சமீபத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனையடுத்து, ஜனவரி 1ம் தேதி முதல், COWIN செயலியில் தடுப்பூசிக்கான முன்பதிவு பணி துவங்கியது.
இதுவரை நாடு முழுவதும் இருந்து சுமார் 6.35 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இன்று முதல் நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி (Corona Vaccine) போடுவதற்காக டெல்லியில் 159 மையங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
டெல்லி அரசின் மாநில சுகாதாரத் திட்டம் தனது பட்டியலை வெளியிட்டிருக்கிறது. COVAXIN தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே அனுப்பி வைப்பார்கள். 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படும். அதே சமயம் தமிழகத்தில் 15 முதல் 18 வயது உடையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
மாவட்டங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் வைத்து இத்திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதனையடுத்து, 15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/ கோவின் (COWIN) இணையதளத்தில் நேற்று முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு –
கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
பள்ளிகளில் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும்.
2007 மற்றும் அதற்கு முன் பிறந்த பள்ளி மாணவர்களின் விவரங்களை அளிக்கவும்.
மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசியை மட்டும் செலுத்த வேண்டும்.