அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு… சலூன்கள், ஸ்பா செயல்பட தடை!

by Editor News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 553ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 764 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 22 ஆயிரத்து 775ஆக பதிவானது. 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒமைக்ரான் தொற்று பாதிப்புகளும் அடங்கும். நாடு முழுவதும் இதுவரை 1,525 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கம், டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, தமிழ்நாடு போன்ற பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் திடீரென்று உச்சம் பெற்றுள்ளன.

இது 3ஆம் அலைக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஹரியானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் பழைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மிகப்பெரிய அளவில் ஊரடங்கு வந்துவிடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சூழலில் தற்போது மேற்குவங்க மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அழகு நிலையங்கள், சலூன்கள், விலங்கியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை மூடவும் ஆணையிட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க வேண்டும் எனவும் காலை 10 மணி முதல் 5 மணி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment