தமிழகம் முழுவதும் இன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி மக்கள் நல்வாழ்வுத் துரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிண்டி மடுவிங்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் சுமார் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாகவும், இன்று சென்னையில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சென்னை மநகராட்சி இலக்கு நிர்ண்யித்திருப்பதாகவும் தெரிவித்தார். மொத்தம் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும், அவர் கூறினார். தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேரு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறிய அமைச்சர் 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே கர்பிணிகளுக்கு அதிகம் தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், எனவே அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஜனவரி 3 ம் தேதி முதல் 15 லிருந்து 18 வயது உடைய 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்றும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், , 9.78 லட்ச முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.