நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். விளையாட்டு பாட வேளையில் விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்தபோது கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்து இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டிருந்ததால் இடிந்து விழுந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். அதேசமயம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் அன்பழகன், விஸ்வ ரஞ்சன், சுதீஷ் ஆகியோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார், அத்துடன் காயமடைந்த சஞ்சய், இசக்கி பிரகாஷ் ,ஷேக் அபுபக்கர் ,அப்துல்லா ஆகிய 4 மாணவர்களுக்கும் ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்றும் அத்துடன் இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனையுற்றதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.