அமெரிக்காவில் நேற்றிரவு தொடர்ந்து தாக்கிய சூறாவளியால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கென்டகி, ஆர்கன்சஸ், இல்லினாய்ஸ், மிசோரி, டென்னிசி உள்பட சில மாகாணங்களில் திடீரென நேற்றிரவு அடுத்தடுத்து அதி பயங்கர சூறாவளிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. கொடூரமான இந்த சூறாவளி தாக்குதலில் குறிப்பாக 5 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுமார் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு தாக்கிய சூறாவளியால் அப்பகுதியிலுள்ள ஏராளமான கட்டடங்கள், தொழிற்சாலைகள் உருகுலைந்து போயின. 5 மாகாணங்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்துள்ளன. இந்த சூறாவளி தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான மற்றும் வரலாற்றிலேயே மிகப்பெரிய சூறாவளியாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
கென்டகி, ஆர்கன்சஸ், இல்லினாய்ஸ், மிசோரி, டென்னிசி ஆகிய 5 மாகாணங்களில் சூறாவளி காற்று காரணமாக 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இல்லினாய்சில் மாகாணத்தில் உள்ள அமேசான் வேர்ஹவுஸ் சூறாவளியில் சிக்கி முழுமையாக சேதமடைந்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும், இதேபோல் கென்டகியில் மெழுகுவர்த்தி ஆலையில் , 110 பேர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.