வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிபடுத்திய பின்னரே, சுகாதாரத்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வெளி இடங்களில் இருந்துவரும் பக்தர்களை பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி சுங்கச்சாவடி முன்பு சுகாதாரத்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். அவ்வழியே வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பது குறித்து ஆவணங்களையும், செல்போனில் குறுந்தகவல்களை சரிபார்த்த பின்னரே ராமேஸ்வரம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. விடுமுறை நாளான நேற்று ஏராளமான வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டது . அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.