சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் கடந்தாண்டு இரண்டாவது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு அவர் நடித்த ஜெய் பீம் படம் கூகுள் தேடலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கியது. இப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பாமக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம், ஜெய் பீம் விவகாரம் தமிழகத்தில் பூதாகரமானது.
இந்நிலையில், கடந்தாண்டு இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2-ம் இடத்தில் பிரபல தமிழ் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய பாலிவுட் படமான ஷேர்ஷா உள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ராதே என்கிற இந்தி படம் மூன்றாம் இடத்திலும், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான் பெல் பாட்டம் படம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. எட்டர்னல்ஸ் திரைப்படம் 5-வது இடத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 6-வது இடத்தில் உள்ளது.
இதுதவிர அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி, காட்சில்லா வெர்சஸ் கிங்காங், மோகன்லாலின் திரிஷ்யம் 2 மற்றும் அஜய் தேவ்கன் நடித்த புஜ் ஆகிய திரைப்படங்கள் முறையே 7, 8, 9 மற்றும் 10-ம் இடத்தை பிடித்துள்ளன. 2020-ம் ஆண்டுக்கான அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு அவர் நடித்த ஜெய் பீம் படம் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.