இந்தியாவிற்குள்ளும் அதிரடியாக நுழைந்துள்ளது ஒமைக்ரான் எனும் அபாயகரமான புதிய வகை கொரோனா. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிக நெருங்கிய மாநிலமான கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் 5 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என மத்திய சுகாதார துறை கூறியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் இவ்வகை வைரஸ் தாக்கும் என்பதால் மிக கவனமாக இருக்க வலியுறுத்தியுள்ளது.
ஒமைக்ரான் வருவதற்கு முன்பே தமிழ்நாடு அரசு 1 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தியேட்டர்கள், மார்கெட்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதி என கூறியது. அதனை தற்போது பல்வேறு மாவட்டங்களும் அமல்படுத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி ஆட்சியர், வேலூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இதனை அமல்படுத்தியுள்ளனர். அந்த வரிசையில் மதுரை ஆட்சியரும் தடுப்பூசி போடாவிட்டால் அடுத்த வாரம் முதல் உணவகங்கள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதி இல்லை என அறிவித்து கெடு விதித்திருக்கிறார்.
இச்சூழலில் தடுப்பூசி செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத வகையில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமைச்சர் பி. மூர்த்தி கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரேஷன் கடைகளில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் பொருட்களை வழங்க உத்தரவிடுவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை உயரும். இதுகுறித்து சோதனை நடத்தும்போது முதல்முறை சிக்கினால் எச்சரிக்கப்படுவர். மீண்டும் தடுப்பூசி போடாதது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.