கூந்தலை பாதிக்காமல் இயற்கை முறையிலேயே, எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் ‘முடி சாயம்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
வயதாகும்போது மட்டுமே ‘நரை’ ஏற்படும் என்ற நிலையைத் தாண்டி, இன்று மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடிகள் நரைக்கத் தொடங்குகின்றன. இவற்றைத் தற்காலிகமாக கருப்பாக்குவதற்காக பயன்படுத்தும் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்ட சாயங்கள், உடனடியாக நிறத்தை மாற்றும்.
அதன்கூடவே பக்க விளைவுகளை ஏற்படுத்தி, முடியின் வேர்க்கால்களைப் பாதித்து, முடி உதிர்வையும் அதிகமாக்கும். இந்த ரசாயனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனைத் தவிர்ப்பதற்கு இயற்கை முறையிலேயே, எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் ‘முடி சாயம்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
இயற்கை சாயம்:
இரண்டு அல்லது மூன்று கொட்டாங்குச்சிகளை அடுப்பில் எரித்து, அதன் மூலம் கிடைக்கும் கரியுடன், செக்கில் ஆட்டிய சுத்தமானத் தேங்காய் எண்ணெய்யைத் தேவையான அளவு சேர்த்துக் கலக்க வேண்டும். பின்பு, அதை அரை மணி நேரம் வெயிலில் வைக்க வேண்டும். தலைக்கு குளித்தவுடன் இந்தச் சாயத்தை தடவும்போது முடி நன்றாகக் கருப்பாகும். இதனை தினமும் தடவி வந்தால், நாளடைவில் முடி கருப்பாக மாறும்.
நெல்லிச் சாயம்:
நிழலில் உலர்த்தி விதை நீக்கப்பட்ட 4 நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளவும். அதை லேசாக பொடித்துக்கொண்டு, அடி கனமான வாணலியில் போட்டு மிதமான தீயில் 20 நிமிடங்கள் வரை, நன்றாகக் கருப்பாகும் வரை வறுத்தெடுக்கவும். பின்பு தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். இந்தக் கலவையை அறை வெப்பநிலையில் இரவு முழுவதும் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். இதனைத் தலை முடியில் முழுமையாகத் தடவவும். பின்பு 2 மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும்.
அவுரிச் சாயம்:
‘அவுரி’ எனப்படும் ‘இண்டிகோ பொடி’ – 1 தேக்கரண்டி, மருதாணி பொடி – 1 தேக்கரண்டி, எலுமிச்சம் பழச்சாறு – 1 தேக்கரண்டி, சோளமாவு – 1 தேக்
கரண்டி, உப்பு – சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். மருதாணிப் பொடியில், சிறிது எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சிறிது கெட்டியாக கலந்து கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று புகாதவண்ணம் மூடி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் அவுரிப் பொடி, சோளமாவு, உப்பு இதனுடன் தேவையான அளவு மருதாணிக் கலவை, தண்ணீர் கலந்து, கைப்படாமல் பிரஷ்ஷால் தலை முழுவதும் தடவவும்.
3 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் ஷாம்பூ போடாமல், தண்ணீரால் தலைமுடியை அலசவும். இதன்மூலம் இயற்கையான கருமை நிறத்தைப் பெறுவது மட்டுமின்றி கூந்தல் மிருதுவாகவும் இருக்கும். இதில் பயன்படுத்தும் அவுரி, முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் மிக்கது.
மேற்கூறிய எந்த சாயத்தை பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பின்பும் ஷாம்புவை தவிர்ப்பது நல்லது. சாயம் பயன்படுத்திய இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து வீரியம் குறைந்த ஷாம்புவை உபயோகிக்கலாம்.