நடிகர் கமல்ஹாசன் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், வருகிற டிசம்பர் 3-ந் தேதி வரை அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் 100 நாட்களில் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் கமல்ஹாசன் கலந்துகொள்வார்.
அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நடந்த போட்டிகள் மற்றும் சண்டைகள் குறித்து போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே கலந்துரையாடுவார். இறுதியாக மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்ற நபரை அறிவிக்கும் பொறுப்பையும் கமல் மேற்கொண்டு வந்தார்.
சமீபத்தில் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் மீதான அவரது அணுகுமுறை கமல்ஹாசனைப் போல் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா மாட்டாரா என குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதனைப் போக்கும் வகையில் தற்போது மருத்துவமனை அறிக்கை வெளியாகி உள்ளது.
அதன்படி நடிகர் கமல்ஹாசன் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், வருகிற டிசம்பர் 3-ந் தேதி வரை அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார் என்றும், டிசம்பர் 4-ந் தேதி முதல் தனது அன்றாடப் பணியை தொடங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன்மூலம், டிசம்பர் 4-ந் தேதி அன்றாடப் பணிகளை தொடங்குவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதால், அவர் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.