நியூஸிலாந்து நாட்டில் எம்பியாக இருப்பவர் ஜூலி அன்னி ஜென்டர். இவர் நியூசிலாந்தின் பெண்கள் நலத்துறை மற்றும் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்துள்ளார். அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அங்கம் வகிக்கும் கிரீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி அன்னி ஜென்டர், கர்ப்பமாக இருந்தார். இச்சூழலில் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவரே மகிழ்ச்சியுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று அதிகாலை 3.04 மணியளவில் குடும்பத்தின் புதிய உறுப்பினரை (குழந்தை) வரவேற்றோம். உண்மையாகவே எனது பிரசவத்திற்கு சைக்கிளில் செல்ல வேண்டும் என்று நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் எதிர்பாராவிதமாக அது நடந்துவிட்டது. அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனை செல்லும்போது வலி அதிகரிக்கவில்லை.
மருத்துவமனைக்குச் சென்று 10 நிமிடங்களுக்குப் பிறகே பிரசவ வலியின் உச்சத்தை உணர்ந்தேன். வலி ஒருபுறம் இருந்தாலும் ஆரோக்கியமான அழகான பெண் குழந்தை எங்களுக்குப் பிறந்துள்ளது. அவளுடைய அப்பாவைப் போலவே அழகாக இருக்கிறாள். சிறந்த முறையில் கவனிப்பையும் ஆதரவையும் தந்து சிக்கலற்ற முறையில் பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவர் சைக்கிளில் சென்ற போட்டோ வைரலாகி வருகிறது.