மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை மற்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என கொரோனாவிலிருந்து மீண்டு வர மொத்தம் 14 நாட்கள் ஆகும் என்பதனால் கமல் 2 வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் 100 நாட்களில் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் கமல்ஹாசன் கலந்துகொள்வார்.
அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நடந்த போட்டிகள் மற்றும் சண்டைகள் குறித்து போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே கலந்துரையாடுவார். இறுதியாக மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்ற நபரை அறிவிக்கும் பொறுப்பையும் கமல் மேற்கொண்டு வந்தார்.
அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் கமல்ஹாசன். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கமல்.
மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை மற்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என அவர் இதிலிருந்து மீண்டு வர மொத்தம் 14 நாட்கள் ஆகும். இதனால் அவர் 2 வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் அல்லது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக வதந்தி பரவி வந்தது. பின்னர் கமலே மருத்துவமனையில் இருந்தவாறு தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசன் குணமாகி வரும்வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகை ரம்யா கிருஷ்ணன், கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு தொகுத்து வழங்கி உள்ளார்.
அதனால் அவருக்கு இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் இருக்கும் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அவரை தொகுப்பாளராக களமிறக்க திட்டமிட்டு உள்ளனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.