இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 1,688 புள்ளிகள் குறைந்தது.
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது, கடந்த சில தினங்களாக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருப்பது இந்திய பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மேலும் தொடர்ந்து பங்கு வர்த்தகம் படிப்படியாக சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட 30 நிறுவன பங்குகளில், டாக்டர் ரெட்டீஸ், டி.சி.எஸ்., ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,069 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,242 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 104 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.258.30 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.7.43 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,687.94 புள்ளிகள் குறைந்து 57,107.15 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 509.80 புள்ளிகள் சரிவு கண்டு 17,026.45 புள்ளிகளில் முடிவுற்றது.