லண்டன்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா – வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்து அணியா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி குறித்து கணித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஏற்கெனவே 2015-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளே மோதின. அதில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. தற்போதும் அந்த இரு அணிகளே டி20 இறுதிப்போட்டியிலும் மோத உள்ளன. இன்று நடக்கும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியா 2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இருந்தது. இப்போது கோப்பையை வெல்ல இரண்டாவது வாய்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.