தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசாணை எண்.688, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 28.10.2021-ன்படி, 15.11.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 30-11-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 28-10-2021 அன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மழை வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 30-11-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.