தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும் , காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று பெற்றதாலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கடந்த 6ஆம் தேதி பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. 5 நாட்களாக பெய்து வந்த கன மழையால் பெரும்பாலான குடிசைப் பகுதிகளில் ,மழைநீர் சூழ்ந்தது .சென்னை காவல் துறையின் 13 காவல் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கு காவல் குழுவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன், ஒன்றிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதுடன் வெள்ள நீரை அகற்றும் பணிகள் மோட்டார்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
இருப்பினும் திமுக அரசின் மெத்தனப் போக்கே சென்னையில் வெள்ளக்காடாக மாறியதற்கு காரணம் என அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பருவமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் முன்னாள் சட்டமன்ற அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதேபோல் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார். அவர் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், விருகம்பாக்கம், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமி, தாம்பரம், கீழ்க்கட்டளை , கோவிலம்பாக்கம், காரப்பாக்கம், கொட்டிவாக்கம், தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, ஆலையம்மன் கோவில், மயிலாப்பூர் ,தெப்பக்குளம், அருந்ததியர் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.