டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது .
அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். பிறகு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
அந்த அணியில் டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 72 ரன்களும், கான்வே 46 ரன்களும் எடுக்க நியூசிலாந்தின் வெற்றி எளிதானது. இந்த வெற்றியின் மூலம் கடந்த மூன்று வருடங்களில் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.
2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் நூலிழையில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து தோல்வியடைந்தது. 2021 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது . தற்போது டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி.
மூன்று வருடங்களில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தன்னிகரற்ற அணியாக நியூசிலாந்து விளங்குகிறது.