மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ரேஷன், சிலிண்டர் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமைந்துள்ளது. இதனை செலுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்தாலும் அச்சம் காரணமாக பொதுமக்களில் சிலர் இன்னும் செலுத்திக் கொள்ள மறுக்கின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 74 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி போட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் அவுரங்காபாத் 26-வது இடத்தை பெற்று பின்தங்கியுள்ளது.
இந்த மாவட்டத்தில் வெறும் 55 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால் அவுரங்காபாத் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், சமையல் கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.