லண்டனில் நடைபெற்ற உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் 2021 விருது நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் அமைப்பால் நிறுவப்பட்ட இந்த விருது, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருது இதுவாகும்.
இது தொடர்பான அவரின் சமூகவலைதள பதிவில், லண்டனில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதை பெருமிதம் கொள்கிறேன்.
என் பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
தாமு, உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இந்தியாவில் பிரபலமான சமையல் கலைஞர் ஆவார்.
இத்துறையில் அவர் இரண்டு சதாப்தங்களுக்கும் மேலாக ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை தாமு பெற்றுள்ளதோடு, 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.
மேலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று உலக தமிழர்கள் மத்தியில் தாமு மிகவும் பிரபலமாக விளங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.