சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் வழக்கம் போல் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இருப்பினும் தன்னார்வலர்கள் மூலமாக பால், குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பதனம் செய்யும் பேக்கிங் தொழிற்சாலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் ,காக்களூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஆவின் தொழிற்சாலைகள் 24 மணிநேரமும் செயல்படும். இதன் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆட்சியில் கவனக்குறைவு காரணமாக மழை காலத்தில் பால் லிட்டருக்கு 200 ரூபாய் வரை விற்பனையானது. இந்த முறை மக்களுக்கு இது போன்ற சிரமங்கள் ஏற்படாத வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 லட்சத்து 20 ஆயிரம் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் படகுகள் மூலம் சென்று ஆவின் பால் வினியோகம் செய்யப்படும் என்றார்.
251